×

கடைசி ஓவரில் 4 விக்கெட் குஜராத் த்ரில் வெற்றி: ராகுல் அரை சதம் வீண் நூர், மோகித் அபார பந்துவீச்சு

லக்னோ: ஐபிஎல் தொடரின் 16வது சீசன் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் மோதிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சாஹா, கில் இருவரும் குஜராத் இன்னிங்சை தொடங்கினர். கில் ரன் ஏதும் எடுக்காமல் க்ருணால் சுழலில் ரவி பிஷ்னோய் வசம் பிடிபட, குஜராத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து சாஹாவுடன் கேப்டன் ஹர்திக் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தனர். சாஹா 47 ரன் (37 பந்து, 6 பவுண்டரி) விளாசி க்ருணால் பந்துவீச்சில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபினவ் மனோகர் 3 ரன், விஜய் ஷங்கர் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய ஹர்திக் 66 ரன் (50 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), டேவிட் மில்லர் 6 ரன் எடுத்து ஸ்டாய்னிஸ் வேகத்தில் பெவிலியன் திரும்ப, குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது.ராகுல் திவாதியா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ பந்துவீச்சில் க்ருணால், ஸ்டாய்னிஸ் தலா 2, நவீன் உல் ஹக், அமித் மிஷ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 6.2 ஓவரில் 55 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. மேயர்ஸ் 24 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து ராகுல் – க்ருணால் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்க்க, லக்னோ எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ராகுல் 38 பந்தில் அரை சதம் அடித்தார். க்ருணால் 23 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து நூர் அகமது பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் 1 ரன், ராகுல் 68 ரன் (61 பந்து, 8 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, பதற்றமான லக்னோ பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுப்பு நடத்தினர். இதனால், எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணிக்கு 33 பந்தில் 30 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 22 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் பந்துவீச்சில் நூர் அகமது (ஆப்கன், 18 வயது), மோகித் ஷர்மா தலா 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர். மோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post கடைசி ஓவரில் 4 விக்கெட் குஜராத் த்ரில் வெற்றி: ராகுல் அரை சதம் வீண் நூர், மோகித் அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Rahul ,Veen Noor ,Mohit ,Lucknow ,IPL ,Lucknow Supergiants ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்